Tuesday, July 6, 2010

ரசித்தவையில் ஒரு கவிதை

மூங்கில் நுனிப் பனியை
புகழ்கின்றோம்
மூக்கின் நுனிப்பனியைத்
துடைக்கின்றோம்

இரண்டிலும் பனி
பார்வையில் பிணி

பச்சை மரக்காட்டிடையும்
மரங் கொத்தி
தேடுவதென்னவோ
பட்ட மரம்

நீர் மேல் நிலவு
நிமிடத்தில் உடையும்
நிமிடத்தில் சேரும்
நிலவுக்குக் கவலையில்லை

வடி கட்டிப் போகும்
அமுதத்தைப் பாரார்
வடியில் மிஞ்சும்
மிச்சத்தைப் பார்ப்பார்

காலையும் மாலையும்
அழித்து அழித்துப்
போடுகின்றது
அழகழகான சித்திரம்

வானமும்
பகலிலும் இரவிலும்
பொட்டு வைத்துப்
பார்க்கின்றது

பச்சைச் சேலையில்
பள பளக்கும்
நீர்க்கரை கட்டி
பூமியும் அழகுதான்

இயற்கை சிரிக்கின்றது
மனிதன் அழுகின்றான்

எல்லைகள் நட்டு
தொல்லைகள் பெற்று
கோடுகள் கிழித்து
கொடுமைகள் செய்து

மனிதன் அழுகின்றான்
இயற்கை சிரிக்கின்றது


ரசித்தது